Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கட்சி சின்னங்களுடன் முக கவசம் தயாரிக்கும் பணி மும்முரம்

மார்ச் 04, 2021 12:46

கோவை:தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது.இதனையொட்டி தேர்தல் நடைமுறை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தமிழக அரசியல் களம் சுறுசுறுப்பாக உள்ளது. கோவையில் பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர். இந்தநிலையில் கோவையில் பிரசாரத்துக்கு தேவையான கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து மொத்தமாக துணிகள் கொள்முதல் செய்யப்பட்டு அரசியல் கட்சிகளுக்கு ஏற்ப வண்ணமாக்கப்படுகிறது. அதன் பிறகு ஸ்கிரீன் பிரிண்டிங் முறையில் கொடிகளில் அந்தந்த கட்சிகளின் சின்னங்கள் பொறிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தையல் தொழிலாளர்களிடம் கொடிகளை கட்டுவதற்கு நூல் பொருத்துவது, கொடிகளின் நான்கு புறங்களிலும் ஓரம் அடிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்து முழுமை பெறும் நிலையில் கொடிகள் விற்பனைக்காக கோவை, திருப்பூர், திருச்சி, சேலம், கரூர், நாமக்கல், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆர்டரின் பேரில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

கூட்டணி குறித்த முடிவு வேட்பாளர் அறிவிப்பு வெளியான பிறகு சின்னம், வேட்பாளர் புகைப்படம் பெயருடன் கட்சி கொடி நிறத்தில் நிறைய ஆர்டர் வரும் என்பதால் முன் கூட்டியே கட்சி கொடிகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு 2 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்படுகிறது. காட்டன், வெல்வெட், பாலிஸ்டர் துணி வகைகளில் தயாரிக்கப்படும் கட்சி கொடிகள் 8-க்கு 10 அங்குலம் வரையும், 10-க்கு 60 அங்குலம் வரையும் பல்வேறு அளவுகளில வடிவமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் அ.தி.மு.க., பா.ஜனதா, தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அ.ம.மு.க., தே.மு.தி.க., பா.ம.க . உள்ளிட்ட அனைத்து கட்சி கொடிகளும் தயாரிக்கப்படுகிறது. கொடிகள் குறைந்தபட்சமாக ரூ. 10 முதல் விற்பனை செய்யப்படுகிறது. கட்சி கொடிகள் மட்டுமின்றி கட்சி சால்வைகள், அரசியல் தலைவர்களின் படம் பொறித்த மோதிரங்கள், பேட்ஜ்கள், ஷீல்டு சாவி கொத்து, மப்ளர் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தேர்தலுக்காக புது முயற்சியாக கட்சி வண்ணங்களில் , அந்தந்த கட்சியின் சின்னங்கள் வரையப்பட்ட முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த முக கவசங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்