Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக ஆட்சிக்கு வந்ததும் தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாவார்கள்: மு.க.ஸ்டாலின்

ஏப்ரல் 07, 2019 10:49

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவை தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து ஆரணி அடுத்த இரும்பேடு கூட்ரோட்டில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்திய மக்களை வஞ்சிக்கும் சர்வாதிகார ஆட்சி நடத்துகிற மோடியை வீட்டுக்கு அனுப்பும் நாள் வரும் 18ம்தேதி. கடந்த 20ம்தேதி என்னுடைய பிரசார பயணத்தை தொடங்கினேன்.  

அதற்கு முன்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டேன். காங்கிரஸ் கட்சியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய நாட்டின் ஹீரோவாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. அதைப்பார்த்து மோடி ஜீரோவாக மாறியிருக்கிறார். மோடிக்கு காய்ச்சலே வந்துவிட்டதாக தகவல் வருகிறது.  

மோடியை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று சித்தரிக்கிறார்கள். பாஜவை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என்று மோடியும், அமித்ஷாவும் சொல்வதை அத்வானியாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாடு மோடிக்கு சொந்தமல்ல. இந்தியா அமித்ஷாவுக்கு மட்டும் சொந்தமல்ல. சாதாரண குடிமகனுக்கும் சொந்தம். 

விஞ்ஞான ரீதியாக மோடி எதிர்கொள்கிறார் என்று எடப்பாடி பேசியிருக்கிறார். ஒரு வேளை செல்லூர்ராஜூவிடம் போய் கற்று இருப்பாரோ? திமுக தலைமையில் அமைந்திருப்பது கொள்கை கூட்டணி. நமக்கு எதிராக அமைந்திருப்பது கொள்ளை கூட்டணி. அவர்கள் நடத்திய பேரம், மிரட்டல்கள், சதிவேலையை மக்கள் உணர்ந்துள்ளனர். அதிமுக அரசின் ஊழல்களை பாமக புத்தமாக வெளியிட்டது.  

அதன்பிறகு ஜெயலலிதா இதில் சம்பந்தப்பட்ட ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்களை ஒரு அறையில் பூட்டி மிரட்டி எழுதி வாங்கினார். இவற்றை பென்டிரைவில் பதிவு செய்து அதை கொடநாட்டில் வைத்துள்ளார். அதுதான் கொடநாடு விவகாரம். நான் கொடநாடு விவகாரம் பற்றி, பேசக்கூடாது என நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். 30 நாட்கள் அதைதான் பேசியிருக்கிறேன்.  

திமுக ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக்கையில் சொன்னதை போல நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ2500, கரும்புக்கு ரூ4000, கரும்பு நிலுவை தொகை வழங்கப்படும். ஏழைகள் அடமானம் வைத்துள்ள நகைகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். 10ம் வகுப்பு படித்த ஒரு கோடி இளைஞர்கள் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். 

நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும். கேபிள் டிவி கட்டணம் பழையபடி குறைக்கப்படும் என அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்