Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுக்கோட்டையில் பாஜக தீவிர வாக்குச் சேகரிப்பு: அதிமுகவினர் அதிர்ச்சி

மார்ச் 06, 2021 12:43

புதுக்கோட்டை:அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாகவே புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜகவினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில், புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பாஜகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதில் ஒன்றான புதுக்கோட்டை தொகுதியானது புதுக்கோட்டை நகராட்சி, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் சில ஊராட்சிகளை உள்ளடக்கி உள்ளது. இத்தொகுதியில் பாஜக மாவட்டத் துணைத் தலைவர் ஏ.வி.சி.சி.கணேசன் தலைமையில், மாவட்டச் செயலாளர் விஜயகுமார், உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும், வாக்குச்சாவடி முகவர்கள், உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோரை நேரில் சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாகவே பாஜகவினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருவது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவின் முக்கியத் தொகுதிகளான விராலிமலை மற்றும் புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் பாஜகவினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அதிமுகவினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து ஏ.வி.சி.சி.கணேசன் கூறுகையில், "மாவட்டத்தில் புதுக்கோட்டை தொகுதியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பெறுவதற்கு கடும் முயற்சி செய்து வருகிறோம். தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனையின்படி இத்தொகுதியில் உள்ள 263 வாக்குச்சாவடிகளுக்கும் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, பல்வேறு பொறுப்பாளர்களையும் நியமித்து தீவிர வாக்குச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

நாளொன்றுக்கு 30 வாக்குச்சாவடிகள் வீதம் வாக்குச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மாவட்டத்தில் புதுக்கோட்டை தொகுதியில்தான் கட்சியில் இருந்து அதிக உறுப்பினர்கள் உள்ளனர். தொகுதி கிடைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இத்தொகுதியைப் பொறுத்தவரை வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி பாஜகதான் என்பதை இந்தத் தேர்தலில் பிரதிபலிக்கும்" என்றார்.

தலைப்புச்செய்திகள்