Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரசுக்கு 25 தொகுதிகள்: திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது

மார்ச் 07, 2021 02:15

சென்னை: திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.தமிழக சட்டசபை தேர்தலில் இந்த தடவை 180 தொகுதிகள் வரை போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அதற்கேற்ப கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதுவரை 5 கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 3 கட்சிகளுக்கும் தலா 6 இடங்களை தி.மு.க. ஒதுக்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீம் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால் தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் கடந்த சில தினங்களாக இழுபறி ஏற்பட்டது. 2011-ம் ஆண்டு தேர்தலில் 63 இடங்களையும், 2016-ம் ஆண்டு தேர்தலில் 41 இடங்களையும் தி.மு.க.விடம் இருந்து காங்கிரஸ் பெற்று இருந்தது.

ஆனால் இந்த தடவை காங்கிரஸ் கட்சிக்கு 18 இடங்களே தர முடியும் என்றதால் இழுபறி உருவானது. காங்கிரஸ் தரப்பில் 30 முதல் 35 தொகுதிகள் வரை எதிர்பார்த்தனர். ஆனால் தி.மு.க. தலைவர்கள் அதை ஏற்க திட்டவட்டமாக மறுத்ததால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து இரு கட்சி தலைவர்களும் திரை மறைவு பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர். அதிலும் சுமூக தீர்வு காண முடியவில்லை.

நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்கள் இதுதொடர்பாக சென்னை சத்திய மூர்த்திபவனில் கூடி ஆலோசித்தனர். அப்போது பெரும்பாலானவர்கள் காங்கிரசுக்கு தி.மு.க.விடம் இருந்து கவுரவமான தொகுதிகளை பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதற்கிடையே தி.மு.க. தலைவர்கள் தங்களை மதிக்கவில்லை என்று காங்கிரசில் அதிருப்தி உருவானது. தி.மு.க. தனது முடிவில் உறுதியாக இருந்ததால் ராகுலிடம் கலந்து பேசி விட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருக்குமா? அல்லது வெளியேறுமா? என்ற பரபரப்பு நேற்று உருவானது. இந்த சிக்கலுக்கு தீர்வு காண மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். காங்கிரஸ் தலைவர்களுக்கு உடனடியாக அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்று நேற்று இரவு 11 மணியளவில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் மு.க.ஸ்டாலினுடன் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மு.க.ஸ்டாலின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் விளக்கமாக எடுத்து கூறினார்.

இதையடுத்து ''கூட்டணி உறுதியானது. தலைவர்கள் அனைவரும் பேசினோம். இன்று காலை 10 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது, எண்ணிக்கையை அப்போது கூறுகிறோம்'' என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். அதன்படி நேற்று காலை அறிவாலயத்திற்கு முதலில் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் வந்தனர். பின்னர் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் வந்தனர்.

அனைவரையும் கனிமொழி வாசல் வரை வந்து அழைத்துச் சென்றார். பின்னர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்துவந்த பெரிய இழுபறி முடிவுக்கு வந்தது. திருச்சி கூட்டத்துக்குச் செல்வதை ஒத்தி வைத்துவிட்டு ஸ்டாலின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ''இந்த ஒப்பந்தம் மூலம் திமுக- காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் ஒரே நேர்க்கோட்டில் வந்துள்ளோம். மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது' என கே.எஸ்.அழகிரி கூறினார். 

தலைப்புச்செய்திகள்