Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக கூட்டணிக்கு ஆதரவு; இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

மார்ச் 07, 2021 02:20

சென்னை:  தமிழக சட்டப்பேரவை தேர்த்லில் இந்திய தவ்ஹீத் ஜமாத் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயற்குழுக் கூட்டம் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையில் மண்ணடி மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இ.த.ஜ தலைவர் எஸ்.எம்.பாக்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழக மக்களின் நலன், சமுதாய நலனை கருத்தில் கொண்டு ஓட்டுகள் சிதறக்கூடாது என்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்த முடிவு அடிப்படையில் ஆய்வு நடத்தினோம். அதனடிப்படையில் எங்கள் ஒட்டுமொத்த ஆதரவு திமுக கூட்டணிக்கு. இந்தச் சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக திமுக தலைமையில் உள்ள கூட்டணியை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி என்றால் அந்தக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வெல்ல வேண்டும். அனைத்துத் தரப்பு மக்கள் வாக்குகளும் சிதறாமல் திமுக கூட்டணிக்குத் திரட்டுவதுதான் பாசிசத்தை வீழ்த்துவதாகும்.மேலும், முஸ்லிம்கள் வாக்கு சிதறாமல் இருக்க திமுக, எஸ்டிபிஐ, மஜகவை அழைத்துப் பேசி அவர்களையும் இணைக்க வேண்டும். தனியரசு, கருணாஸ் போன்றோரையும் அழைத்து இணைக்க வேண்டும்.

ஒரு ஓட்டுகூட சிதறக்கூடாது. பாசிசத்திற்கு எதிரான ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதற்காக திமுகவை ஆதரிக்கிறோம். அசாதுதின் ஓவைசியின், அகில இந்திய மஜ்லிஸ்-இ இடிஹதுல் முஸ்லிம் கட்சி தமிழகத்தில் போட்டியிடுவதால் உருதுவைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் அதிகம் வாழும் வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், திமுக கூட்டணியின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது.

ஏனென்றால் தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நாங்கள் ஓட்டுமொத்தமாக எங்கள் ஆதரவைத் திமுக கூட்டணிக்கு அறிவித்துவிட்டோம். இதற்காக திமுக தலைவரைச் சந்திக்க வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். எங்கள் ஆதரவைத் தெரிவித்துவிட்டோம். நாங்கள் போய் இதற்காகச் சந்திக்கப் போவதில்லை. ஒருவேளை சந்திக்க அழைத்தால் மரியாதை நிமித்தமாக அந்தச் சந்திப்பு இருக்கும் என எஸ்.எம்.பாக்கர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்