Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் 25 தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும்: கராத்தே தியாகராஜன்

மார்ச் 08, 2021 07:07

சென்னை: பா.ஜ.க.வில் சமீபத்தில் இணைந்த கராத்தே தியாகராஜன், சென்னை கோயம்பேட்டில் உள்ள பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (நேற்று) வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தை தொடங்கிவைத்தார். இதன் மூலம் பா.ஜ.க.வுக்கு வெற்றி உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும்.

தி.மு.க. தங்களை அவமதித்துவிட்டது, மதிக்கவில்லை என்று எல்லாம் கூறி சத்தியமூர்த்திபவனில் அழகிரி நாடகம் போட்டார். தற்போது தி.மு.க.விடம் மன்றாடி 25 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. அந்த இடங்களை விற்பனை செய்கின்றனர். இதனால் ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவும். தமிழக துணை முதல்-அமைச்சராகவும், மேயராகவும் இருந்தபோது எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் இருந்த ஸ்டாலின், தற்போது 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வெளியிடப்போவதாக கூறுகிறார். அவர் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டால் சாதாரண ஒரு தொண்டரே அவரைத் தோற்கடிப்பார்.

ஸ்டாலின் முதல்-அமைச்சராக வர வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை ஆதரித்துவரும் தேசியவாதியான நடிகர் ரஜினிகாந்த், நாட்டு நலன் கருதி அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக குரல் கொடுப்பார். தொடர்ந்து ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மத்திய மந்திரிகளும், தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்ற பா.ஜ.க. தயார்நிலையில் உள்ளது என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்