Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நூறு சதவிகிதம் வாக்குப்பதிவு - மாணவ மாணவிகளின்  சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

மார்ச் 08, 2021 03:14

திருநெல்வேலி : நூறு சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி  திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டையில் மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு துவக்கி வைத்து, பேரணியில், தாமும் பங்கேற்றார். அடுத்த மாதம் ஆறாம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளிலும், நூறு சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஆங்காங்கே, அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக அதிகாலையில் பள்ளி மாணவ, மாணவியர் நூறு பேர் கலந்து கொண்ட  சைக்கிள் பேரணி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம்  குலவணிகர்புரம்  பகுதியில் உள்ள செவித்திறன் குறைந்தோர் பள்ளி முன்பாக இருந்து துவங்கிய  இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர்  வே.விஷ்ணு, கொடி அசைத்து துவக்கி வைத்ததுடன், தாமும் மாணவ, மாணவிகளுடன், பேரணியில் பங்கேற்று, அவர்களை உற்சாகப்படுத்தினார்.

புறப்பட்ட இடத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணி, மத்திய சிறைச்சாலை,  பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையம், திருநெல்வேலி- திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலை, முருகன் குறிச்சி, வண்ணார் பேட்டை வழியாக, கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

வழிநெடுகிலும், வாக்குப்பதிவு தொடர்பான, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, துண்டுப்பிரசுரங்களை,  பேரணியில் பங்கேற்று, பொது மக்களுக்கு, விநியோகித்தப்படி வந்தனர்.துவக்க நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட, வருவாய் அலுவலர் பெருமாள், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணன், பாளையங்கோட்டை வட்டாட்சியர்  செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்