Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிஐடியு  தொழிலாளர்களுக்கு பணி வழங்க மாட்டோம் - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் அறிவிப்பு

மார்ச் 09, 2021 02:35

திருச்சி  : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற வியாபாரிகள் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் இனி சிஐடியுவை  சேர்ந்த தொழிலாளர்களுக்கு வியாபாரிகள் ஒருபோதும் பணி வழங்க மாட்டோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற வியாபாரிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி பால் பண்ணை பகுதியில்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...  வணிகர்கள் பேரமைப்பின் மூத்த உறுப்பினர் கந்தன் திருச்சி பால்பண்ணை அருகில் புதிதாக திறக்கப்பட்ட லாரி புக்கிங் சென்டரில் கடுமையாக தாக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 மேலும் இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது குற்றப்பிரிவு 307 கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.  சிஐடியுவை சேர்ந்த குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் முதல் கட்டமாக திருச்சியில் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

மேலும், சிஐடியு மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் அக்கட்சியை சேர்ந்த ராமர் ஆகிய இருவரும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், சிஐடியுவின் கட்சி வேட்பாளர்கள் எந்த இடத்தில் நிறுத்தப்பட்டாலும் அவர்களுக்கு வியாபாரிகள் ஆதரவு தரமாட்டோம் எனவும், டெபாசிட் கூட வாங்க முடியாத அளவிற்கு நாங்கள் அவர்களுக்கு எதிராக தேர்தல் பணியாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்   தலைமை அலுவலகத்தில் நேரடியாக சென்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட தலைவர் ராஜா மற்றும் அக்கட்சியை சேர்ந்த ராமர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவர்களை கட்சியினுடைய அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எழுத்துபூர்வமாக வலியுறுத்த உள்ளோம்.

இனி சிஐடியுவை  சேர்ந்த எந்த ஒரு தொழிலாளிகளுக்கும் திருச்சி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் ஒருபோதும் வேலைவாய்ப்பு தரப்போவதில்லைஎன்றும், இந்தத் தாக்குதலின் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையையும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்