Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று

மார்ச் 14, 2021 07:25

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள ரெஜினா சேலி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் ரெஜினா சேலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடந்து வருகிறது. இதில் 1,100 மாணவிகள் கல்வி கற்று வந்தனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டது.
 
இதையடுத்து அந்த மாணவிக்கும், அவருடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த 11-ந்தேதி 460 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து பள்ளியில் உள்ள அனைத்து அறைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. 

மேலும் பள்ளிக்கு இருவார காலம் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே 20 மாணவிகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று மேலும் 36 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து பரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்