Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலியில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் 

மார்ச் 16, 2021 07:32

திருநெல்வேலி : தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தனியார் மருத்துவமனை ஊழியரிடமிருந்து 6 லட்சத்து 50 ஆயிரம்  ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, திருநெல்வேலி மாநகரப்பகுதியில் மட்டும், மொத்தம் 7 இடங்களில் தற்காலிகமாக, வாகன சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், சுழற்சி முறையிலான பணியாளர்களை கொண்டு,  24  மணி நேரமும், வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையம் முன்பாக, டாஸ்மாக் துணை மேலாளர் மோகன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் பால்சுவாமி,  தலைமை காவலர் சரவணன் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் என, தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சந்தேகத்துக்கு இடமான முறையில், இருசக்கர வாகனம் ஒன்றில் வந்தவரிடம், சோதனை மேற்கொண்டதில் அவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை, பறக்கும் படையினர் கைப்பற்றி, பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள துணை வட்டாட்சியர் மாரிராஜிடம் ஒப்படைத்து, சார்நிலை கருவூலத்திற்கு, அனுப்பி வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்