Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உயர் தொழில்நுட்ப பூங்கா செயல்படச் செய்வேன் - ரூபி மனோகரன் 

மார்ச் 17, 2021 09:27

திருநெல்வேலி :தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள, ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய, நான்கு சட்டமன்ற தொகுதிகளில், தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள ஒரே ஒரு தொகுதியான நாங்குநேரி தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான ரூபி ஆர்.மனோகரன் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நாங்குநேரியில், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது,  திருநெல்வேலி மாவட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட தொகுதியான நாங்குநேரி தொகுதியில், வாழைப்பயிர்கள் தான், பிரதான விவசாயம் ஆகும். ஆனால், வாழை விவசாயத்தில், மிகவும் கஷ்டப்பட்டு, அவற்றை உற்பத்தி செய்யும் சந்தைகளில் வாழைத்தார்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. மாறாக உற்பத்தி செலவை விட, மிகக்குறைந்த அளவிலேயே, விலை கிடைக்கிறது. இதனை கருத்தில்கொண்டு, மாநில அரசானது  நெல்லுக்கு  விலை நிர்ணயம் செய்வது போல வாழைத்தார்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழகத்தில் அமையப்போகும் தி.மு.க.ஆட்சியின் போது  வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

மருத்துவ வசதியில், மிகவும் மோசமான நிலையில் உள்ள களக்காடு பகுதிக்கு, அதனை சீர்ப்படுத்தி, மாநில அரசு சார்பில்,  அனைவருக்கும்  உரிய மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுத்திட, முயற்சி செய்வதாகவும்,  படித்த இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்புகளை வழங்கிடுவதற்காக,  தி.மு.க.ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட, நாங்குநேரி  உயர் தொழில்நுட்ப பூங்கா திட்டம், அ.தி.மு.க அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தற்பொழுது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

வரவிருக்கிற  தி.மு.க. ஆட்சியில், நாங்குநேரி உயர் தொழில்நுட்ப பூங்காவினை, மீண்டும் செயல்படச் செய்வதாகவும்   திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி ஆர். மனோகரன், நாங்குநேரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை முன்னாள் இணை அமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர், உடனிருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்