Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோதாவரி-காவிரி திட்டம் நிறைவேற்றப்படும் -எடப்பாடி பழனிசாமி

மார்ச் 17, 2021 02:03

தஞ்சை:தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல் பிரசாரத்தை தொடங்கினார். நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசாரம் தொடங்கிய அவர் மாலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் பிரசாரம் செய்தார். இரவு தஞ்சை ரயிலடி பகுதியில் பேசினார்.இரவில் தஞ்சையில் தங்கிய இவர் இன்று காலை திருவையாறு சென்றார். அங்கு தேரடி வீதி அய்யாரப்பர் கோவில் முன்பு அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜ.க. வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து பேசியதாவது:-

தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் போட்டியிடும் நமது கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். இந்த வெற்றி மூலம் இப்பகுதி மிகவும் பலம் பெறும்.இந்த பகுதியில் உள்ள கல்லணை கால்வாயை நவீனப்படுத்தி சீரமைப்பதற்காக ரூ.290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று நீங்கள் எல்லாம் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் தங்களின் நிலத்தை பறித்து விடுவார்கள், கைப்பற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில் இருந்தீர்கள்.

இந்த அம்மாவின் அரசானது அந்த அச்சத்தை போக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதனை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறோம். ஆனால் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அப்போதைய துணை முதல்வராக இருந்தது மு.க.ஸ்டாலின் தான்.நானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் துன்பத்தை, துயரத்தை, வேதனையை, கஷ்டத்தை உணர்ந்து அவர்களது துன்பத்தை போக்கும் வகையில், அவர்களது அச்சத்தை போக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்ட பாதுகாப்பினை அளித்துள்ளோம்.

எனது லட்சியமே நீர் மேலாண்மையை உருவாக்குவதுதான்.அதேபோன்று காவிரியில் கடந்த 50 ஆண்டு காலமாக நீர் கிடைப்பதற்கு கர்நாடகாவிடம் ஒவ்வொரு முறையும் நாம் போராடி வந்திருக்கிறோம். உபரிநீர் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்து வந்தது. ஆனால் இன்றைக்கு அம்மாவின் வழியிலான எனது அரசானது உச்சநீதிமன்றத்தில் சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்டி உள்ளது.

மேலும் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இந்த திட்டத்திற்கு ரூ.80 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும். உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ, அதே போன்று விவசாயிகளுக்கு நீர் முக்கியம். இதை உணர்ந்தே இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன்.இதற்காக ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்களிடம் பேசி அவர்களும் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார்கள். பாரத பிரதமரும் தமிழக மக்களுக்கு தேவையான இந்த திட்டத்தை நிறைவேற்ற உதவுவதாக கூறியுள்ளார்.

அம்மாவின் இந்த அரசானது தொடரும்போது, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிச்சமாயமாக வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறிப்பிட்ட காலத்தில் நடவு செய்ய முடியும். நல்ல விளைச்சலை பெறமுடியும். எனது அரசானது இந்த திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றும்.பருவ காலங்களில் பெய்யும் மழை நீர் வீணாக போவதை தடுப்பதற்காக நான் கொண்டு வந்த குடிமராமத்து திட்டம் விவசாயிகளின் பங்களிப்போடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஏரி, குளம், குட்டை, ஊரணிகள் சமீபத்திய பருவ மழையால் நிரம்பியுள்ளது. இப்போது அந்த நீர் கோடை காலத்தில் உங்களுக்கு உதவுகிறது. நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இதே போல் நதிகள், ஓடைகளின் குறுக்கே ஏராளமான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன என்று பழனிசாமி பேசினார்.

தலைப்புச்செய்திகள்