Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் தேசிய அரசியலுக்கு திரும்பும் நாராயணசாமி?

மார்ச் 18, 2021 07:48

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாலும் முக்கியமான காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகியதாலும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிபெற்றது. இங்கு காங்கிரஸ் சார்பாக நாராயணசாமி முதல்வராக இருந்தார்.

2016தேர்தலில் முதலில் இவர் போட்டியிடவில்லை என்றாலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்ற பின் முதல்வராக பொறுப்பேற்று, பின் இடைத்தேர்தலை எதிர்கொண்டார் நாராயணசாமி. இந்த நிலையில் 2021 சட்டசபை தேர்தல் நெருங்குவதற்கு சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி காங்கிரசில் வலிமையாக இருந்த மல்லாடி கிருஷ்ணராவ், நமச்சிவாயம் போன்றவர்கள் காங்கிரசில் இருந்து விலகி பாஜக, என். ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் சேர்ந்தனர். இதனால் மொத்தமாக திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இன்னொரு பக்கம் என். ஆர் காங்கிரஸ் - பாஜக - அதிமுக சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.

இங்கு மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது சந்தேகமாக உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் சார்பாக வெளியிடப்பட்ட புதுச்சேரி வேட்பாளர் பட்டியலில் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை. முதல்வராக இருந்த நாராயணசாமி இந்த முறை தேர்தலிலேயே போட்டியிடவில்லை. இதனால் இவர் புதுச்சேரி அரசியலில் இருந்தே வெளியேறுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

கிட்டத்தட்ட காங்கிரசில் தேசிய அளவில் 20 வருடங்கள் நாராயணசாமி கோலோச்சினார். அதேபோல் மீண்டும் தேசிய அரசியலுக்கு திரும்ப நாராயணசாமி திட்டமிட்டுள்ளார். புதுச்சேரியில் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை அவர் விரும்பவில்லை. இதனால் தேசிய காங்கிரசுக்கு கம்பேக் கொடுக்க போகிறார் என்று நாராயணசாமிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைப்புச்செய்திகள்