Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குலதெய்வம் கோயிலில் சசிகலா வழிபாடு

மார்ச் 18, 2021 09:50

தஞ்சாவூர்: சசிகலா மூன்று நாள் பயணமாக தஞ்சாவூர் சென்றிருக்கும் நிலையில், இன்று தனது கணவர் நடராசனின் குலதெய்வ கோயிலில் வழிபட்டதுடன் அங்கு நடைபெற்ற காதணி விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 

சசிகலாவின் கணவர் மறைந்த நடராசனின் சொந்த ஊரான தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் அமைந்துள்ளது குலதெய்வக் கோயிலான வீரனார்,மதுரை வீரன் கோயில். இங்கு நடைபெற்ற சிறப்புப் பூஜை மற்றும் காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து நேற்று புறப்பட்ட சசிகலா தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள நடராசனின் பங்களா வீட்டில் தங்கினார்.

வயல்வெளி, தென்னந்ததோப்பிற்கு இடையே அமைந்துள்ள கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விளார் ஊராட்சிமன்றத் தலைவரான அதிமுக-வைச் சேர்ந்த மைதிலிதம்பி, ஊராட்சி ஊழியர்கள் மூலம் ஊரை சுத்தம் செய்து புளோரிங் அடிக்க வைத்து தனது பணிவினையைக் காட்டினர். ஒரு சில இடங்களில் போலீஸார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்படிருந்தனர்.

நேற்றே குலசாமிக்கு காணிக்கையாக 21 கிடா வெட்டி கறி சோறு போட்டு அனைவருக்கும் விருந்து வைக்கப்பட்டது. இன்று காலை சரியாக எட்டு மணிக்கு கோயிலுக்கு வந்தார் சசிகலா. உடன் சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் வந்தார். காரிலிருந்து இறங்கிய சசிகலாவை நடராஜனின் தம்பி ராமசந்திரன், அவரது மகன் டாக்டர் ராஜூ ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

சசிகலா வருவதற்கு முன்னரே குழந்தைகளுக்கு மொட்டையடித்து தயார் நிலையில் குடும்பத்தினர் காத்திருந்தனர். பின்னர் வீரனார், மதுரைவீரனுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. அப்போது சசிகலா முனுமுனுத்தப்படி அமைதியாக வேண்டி கொண்டிருந்தார். சாமியின் பீடத்தில், `முன்னோர்கள் நம் தெய்வம்; உறவுகள் ஒற்றுமை; நட்பும் நன்றியும் மறவோம், நீதியும் தருமமும் கடவுளே, வீரத்துடன் விவேகத்தைப் போற்றுவோம்’ என்று செதுக்கப்பட்டிருந்த வாசகங்களை உன்னிப்பாக கவனித்து படித்தார்.

அப்போது அருகிலிருந்த டாக்டர் வெங்கடேஷிடம்,`` மாமா (நடராசன்) `நட்பும் நன்றியும் மறவோம்’ என அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாரு. அவர் வணங்கிய குலதெய்வ கோயிலிலும் அத எழுதியிருக்கார். உறவுகள் ஒற்றுமையாக இருக்கணும்னு நெனச்சார். அதையும் எல்லோருக்கும் உணர்த்திட்டு போயிருக்கார். ஆனா அரசியலில் நட்பும், நன்றியும் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே பலருக்கு தெரியல. கடைசி வரை அந்த வார்த்தைக்கு பாத்திரமா நான் இருந்துட்டா போதும்’ என நா தழு தழுக்கப் பேசினார் சசிகலா.

பின்னர் நடராசனின் சகோதரர்கள் பழனிவேல், ராமச்சந்திரன் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த எட்டு குழந்தைகளுக்கு காது குத்தும் நிகழ்வு நடைபெற்றது. கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்கிருந்த சசிகலா அதன் பின்னர் புறப்பட்டுச் சென்றார். சசிகலா அடுத்து எங்கு செல்கிறார் என அவர்களுடைய முக்கிய உறவினர்களுக்கு கூட தெரியாமல் ரகசியம் காக்கப்படுகிறது. பாபநாசம், திருவிடைமருதூர் மகாலிங்க சாமி கோயில் மற்றும் தனது சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனது குலதெய்வ கோயில்களுக்கு வழிபட சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சசிகலா குடும்பத்தினர் தரப்பில் சிலரிடம் பேசினோம்,`` நடராசனுக்கும்,சசிகலாவிற்கும் திருமணம் நடைபெற்ற புதிதில் இருவரும் இந்த குலதெய்வ கோயிலுக்கு வந்தனர். அதன் பிறகு வருவதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனாலும் நடராசன் சகோதரர்கள் மூலம் மறக்காமல் கோயிலில் அடிக்கடி பூஜை செய்யச் சொல்வார். கிட்டதட்ட 25 வருடங்களுக்கு பிறகு இப்போது தான் மீண்டும் கோயிலுக்கு வந்திருக்கிறார் சசிகலா 

சசிகலா வருவது குறித்து அறிந்த அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர் அவரைச் சந்தித்தனர். ஒரத்தநாடு தொகுதி அ.ம.மு.க வேட்பாளரான மா.சேகர் கோயிலுக்கே வந்து சசிகலாவை சந்தித்து ஆதரவு கேட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் தொடர்பில் உள்ள அ.தி.மு.கவை சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் வீட்டில் சசிகலாவை சந்தித்ததாக பேசப்படுகிறது. அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சசிகலாவை யார் யாரெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதை அறிய ஒரு குழுவை அமைத்து நோட்டமிட சொல்லியிருப்பதாகம் விவரம் அறிந்தவர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்