Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.2 கோடி பறிமுதல்

மார்ச் 19, 2021 09:17

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் ஆகியவை வினியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர், கலால்துறையினர், உள்ளூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநில எல்லைகளிலும் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களை கண்காணித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி பாபு, ஏழுமலை, காவலர் வெங்கடாஜலபதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று எல்லைப்பிள்ளைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இந்திராகாந்தி சிக்னலில் இருந்து தந்தை பெரியார் நகர் வழியாக சென்ற ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் ஒரு மினி வேனை பேட்ரிக் பள்ளி அருகே மடக்கினர். அந்த மினி வேன் எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது எழுதப்படவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் அந்த வேனை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது அதில் இருந்த 4 பெட்டிகளில் ரூ.500, 200, 100 என கட்டுக் கட்டாக ரூ.2 கோடி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முகமது மன்சூர் தலைமையிலான அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மினி வேனில் வந்த காவலர் உள்பட 3 பேரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் இந்திராகாந்தி சிக்னலில் உள்ள தனியார் வங்கியில் இருந்து பணம் கொண்டு வருவதற்கான ஆவணம் மட்டுமே உள்ளது. பணம் எங்கு செல்கிறது என்பதற்கான சான்று ஏதும் இல்லை. பணம் கொண்டு செல்ல உறுதி அளிக்கும் கடிதத்திலும் பல்வேறு முரண்பாடுகள் இருந்ததாக தெரிகிறது. 

பணம் கொண்டு செல்வதற்கான தேர்தல் துறையின் அனுமதி கடிதமும் இல்லை. இதையடுத்து ரூ.2 கோடியுடன் மினி வேன் பறிமுதல் செய்யப்ட்டது. இதுதொடர்பாக மேல் விசாரணை செய்ய வருமான வரித்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்