Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டசபை பொது தேர்தலையொட்டி  7 லட்சம் அழியாத மை பாட்டில்கள் மைசூருவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

மார்ச் 19, 2021 09:22

மைசூரு: சட்டசபை பொது தேர்தலையொட்டி தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 6.99 லட்சம் அழியாத மை பாட்டில்கள் மைசூருவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மை தயாரிப்பு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். 

மைசூரு டவுனில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இலியாக் அண்ட் பெயிண்ட் தொழிற்சாலையில் தேர்தலின்போது வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது இந்த நிறுவனத்தில் இருந்துதான் அனைத்து மாநிலங்களுக்கும் அழியாத மை பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. மேலும் கர்நாடகத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதி, 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. 

இந்த நிலையில் இலியாக் அண்ட் பெயிண்ட் தொழிற்சாலை சார்பில் மேற்கண்ட தேர்தல்களுக்கான அழியாத மை பாட்டில்களை தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மைசூருவில் இலியாக் அண்ட் பெயிண்ட் நிறுவன தலைவர் என்.வி.பனிஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் கர்நாடகாவில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல்களுக்காக இலியாக் அண்ட் பெயிண்ட் தொழிற்சாலையில் இருந்து வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் அழியாதை மை பாட்டில்கள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

அதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்க இலியாக் அண்ட் பெயிண்ட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி படிப்படியாக தலா 5 மில்லி லிட்டர் கொண்ட மை பாட்டில்கள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 6.99 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. 

மேற்கு வங்காள மாநிலத்துக்கு 2.7 லட்சம் மை பாட்டில்கள், அசாம் மாநிலத்திற்கு 83,860 மை பாட்டில்கள், தமிழகத்திற்கு 2.37 லட்சம் மை பாட்டில்கள், கேரளா மாநிலத்திற்கு 1.02 லட்சம் பாட்டில்கள், புதுச்சேரிக்கு 6,000 பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. 

இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்