Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமமுக வேட்பாளர்களுக்கு ஆசி வழங்கிய சசிகலா

மார்ச் 19, 2021 12:08

தஞ்சாவூர்: அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்துள்ள சசிகலா அமமுக வேட்பாளர்கள் இருவருக்கு ஆசிர்வாதம் வழங்கி, வாழ்த்து தெரிவித்துள்ளார். பெங்களூரிலிருந்து சென்னை வந்த சசிகலா தி.நகர் இல்லத்திலேயே இருந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் சென்றார்.

தஞ்சை விளார் பகுதியில் இருக்கும் தனது வீட்டில் தங்கினார். பின்னர் விளாரில் இருக்கும் குலதெய்வக் கோயிலில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜனின் சகோதரர் பழனிவேலின் பேரப்பிள்ளைகளின் காதுகுத்து விழாவில் கலந்து கொண்டார்.

நீண்ட நாட்கள் கழித்து குடும்பத்தினர், உறவினர்கள் என பலரையும் பெயர் சொல்லி அழைத்து பேசி சசிகலா உற்சாகமாக காணப்பட்டார். அதன் பின் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

அங்கே சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் வளாகத்தில் சசிகலா உறவினர்கள் சூழ வந்துகொண்டிருந்தபோது கும்பகோணம் அமமுக வேட்பாளர் பாலமுருகனும், ஒரத்தநாடு அமமுக வேட்பாளர் மா. சேகரும் கோயில் வளாகத்திலேயே சசிகலாவை சந்தித்து வணங்கினர். அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிய சசிகலா தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 

இரட்டை இலைக்கு எதிராக எப்படி வாக்கு கேட்க என யோசித்துதான் சசிகலா இப்படி முடிவெடுத்தார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தேர்தலுக்குப் பின்னர் கட்சிகள் இணையும் என்றும் அப்போது சசிகலா பக்கம் அதிமுக வரும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

தலைப்புச்செய்திகள்