Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐ.டி. ரெய்டில் சிக்கிய ம.நீ.ம. பொருளாளர் சந்திரசேகரன்

மார்ச் 19, 2021 12:13

திருப்பூர்: தமிழக சட்டமன்ற தேர்தலில் பணம் விளையாடுவதை தடுக்க வேண்டும் என்பதே பிரதான நோக்கம் என்று ஆணையர் சுரபி கூறியிருக்கும் நிலையில், மக்கள் நீதி மய்ய பொருளாளர் சந்திரசேகரின் வீட்டில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 80 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே பணப்பட்டுவாடாவை தடுக்கும் நோக்கில் வருமானவரித்துறையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வந்தது. குறிப்பாக அரசு ஒப்பந்ததாரர்கள் மூலமாக வேட்பாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டும், பல்வேறு புகார்களும் வருமான வரித்துறையினருக்கு வந்த வண்ணம் இருந்தது.

அதன் அடிப்படையில் ஏற்கனவே ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணமும், தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. கணக்கில் வராத 175 கோடி ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்ய பொருளாளர் சந்திரசேகர் என்பவரின் வீடு, அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. கோவை, தாராபுரம், திருப்பூர் ஆகிய பகுதிகளில் அவரது உறவினர், நிர்வாகிகள் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதில் சந்திரசேகரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் நேற்று 11.5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் எலக்டோனிக் ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் 80 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் வராத வருமானம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கு கிடைத்த லாபத்தை குறைத்து காட்டி, பல்வேறு கணக்குகளை இவர் முறைகேடாக பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலில் அவர் ஈடுபட்டதும் அது சம்பந்தமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் பணம் விளையாடுவதை தடுக்க வருமானவரித்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆணையர் சுரபி குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்