Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட 7 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

மார்ச் 21, 2021 09:03

தூத்துக்குடி : உரிய ஆவணங்கள் இல்லாமல் வேனில் கொண்டுச் செல்லப்பட்ட  7 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்  பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்கான பறக்கும்படை அதிகாரிகள் தூத்துக்குடி அருகேயுள்ள வாகைகுளம் சுங்கச்சாவடியில்  வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

 அப்போது, திருநெல்வேலியில் இருந்து அந்த வழியாக தூத்துக்குடி நோக்கி சென்ற வேனை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 7 கிலோ தங்க நகைகள் இருப்பதும், அந்த வேனுக்கு பாதுகாப்பாக வந்த மதுரையைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரரிடம் இருந்த துப்பாக்கிக்கான உரிமம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பே முடிவடைந்ததும் தெரியவந்தது.

 இதையெடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ விநாயகம் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இருந்தால் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் இல்லையெனில் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், முன்னாள் ராணுவ வீரர் வைத்திருந்த துப்பாக்கிக்கான உரிமத்தை புதுப்பிக்க மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அவர் விண்ணப்பித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்