Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடியும்,அமித்ஷாவும், மதக்கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டுள்ளனர் - ஸ்டாலின்

மார்ச் 21, 2021 09:07

திருநெல்வேலி  : பாரத பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டுள்ளனர் என திருநெல்வேலியில் நடைபெற்ற, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்,  தி.மு.க.தலைவர் ஸ்டாலின்,பகிரங்க குற்றச்சாட்டு. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள, ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில், நான்கு தொகுதிகளில் போட்டியிடும், தி.மு.க. வேட்பாளர்களையும், மீதியுள்ள ஒரே ஒரு தொகுதியான  நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்து, திருநெல்வேலி டவுண், வாகையடி திடலில்,  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- " மக்களோடு எப்பொழுதும் இருக்கும் இயக்கம் தி.மு.க. மட்டுமே. ஒரு கோடியே, 97 லட்சம்  குடும்ப அட்டைகள் தமிழ்நாட்டில் இருப்பதை பற்றி, கொஞ்சம் கூட சிந்திக்காமல், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று, கற்பனையிலும் கூட, நினைத்து பார்க்க முடியாத ஒரு பொய்யான வாக்குறுதியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது எப்படி சாத்தியமாகும்? என்பது தெரியவில்லை.தி.மு.க.தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும்  திட்டங்கள் அனைத்தும், தி.மு.க.ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளுக்குள், அப்படியே நிறைவேற்றப்படும்.

கொரோனா நிவாரண நிதியாக, ஒரு குடும்பத்திற்கு, ஐயாயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென, தி.மு.க.சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், எடப்பாடி அரசோ, அவ்வாறு கொடுக்காமல், ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தது. எனவே,  மீதியுள்ள நான்காயிரம் ரூபாய், தி.மு.க.ஆட்சிக்கு வந்தவுடன், தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான, ஜூன் மாதம், 3- ஆம் தேதி,  ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும். 

பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், இந்த சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டுள்ளனர். அதனை முறியடித்திடும் வகையில், தி.மு.க.மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்து, அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

தலைப்புச்செய்திகள்