Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஷேக் முஜிபூர் ரஹ்மானுக்கு காந்தி அமைதி விருது - மத்திய அரசு அறிவிப்பு

மார்ச் 23, 2021 08:39

புதுடெல்லி:மத்திய கலாசார அமைச்சகம் சார்பில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் காந்தி அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருது தேசியம், இனம், மொழி, சாதி, மதம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் காந்தியின் கொள்கைகளை பின்பற்றும் எந்த ஒரு நபருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர், தலைமை நீதிபதி மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய நடுவர் மன்றம் இந்த விருது யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.

இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது வங்காளதேசத்தின் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபூர் ரஹ்மானுக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்காளதேசத்தின் தந்தை என போற்றப்படும் ஷேக் முஜிபூர் ரஹ்மானின் 101 வது பிறந்தநாளை அந்த நாடு விமரிசையாக கொண்டாடி வரும் நிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘2020 ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதை யாருக்கு வழங்குவது என்பதை முடிவு செய்ய நடுவர் மன்றம் கடந்த 19ந் தேதி கூடியது. அதில் அகிம்சை மற்றும் பிற காந்திய கொள்கைகள் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்துக்காக சிறப்பான பங்களிப்பை அளித்த ஷேக் முஜிபூர் ரஹ்மானுக்கு அந்த விருதை வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்