Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மறைந்த ஓமன் மன்னருக்கு காந்தி அமைதி விருது - இந்திய அரசு அறிவிப்பு

மார்ச் 23, 2021 08:45

மஸ்கட்:மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்டுக்கு, காந்தி அமைதி விருது வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தியடிகளின் 125-வது பிறந்த நாளான 1995-ம் ஆண்டு இந்திய அரசு அவரது பெயரில் காந்தி அமைதி விருது வழங்குவது என முடிவு செய்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தலைமை நீதிபதி மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினரால் தேர்வு செய்யப்படுகிறது. இந்த குழுவானது கடந்த 19-ந் தேதி கூடியது. அப்போது மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்டுக்கு 2019-ம் ஆண்டுகான மகாத்மா காந்தி அமைதி விருது வழங்குவது என ஒருமனதாக தேர்வு செய்தது. இந்த விருதானது ஓமன் மன்னர் காந்திய வழியில் ஓமன் நாட்டை சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்டவற்றை மேம்படுத்திக் காட்டியுள்ளார். இதன் காரணமாக இந்த விருதுக்கு அவர் பொருத்தமானவர் என முடிவு செய்யப்பட்டது.

ஓமன் நாட்டை தனது திட்டங்கள் மூலம் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். மேலும் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையின் போது அமைதி முயற்சிகள் மேற்கொள்ள பெரும் ஒத்துழைப்பு வழங்கியவர்.இந்தியாவில் கல்வி பயின்றவர். இந்திய முன்னாள் ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவின் மாணவர் ஆவார். இதன் காரணமாக ஓமன் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு சிறப்புடன் இருக்க ஒரு சிற்பியாக திகழ்ந்தார். இதனால் இரு நாடுகளின் உறவு புதிய உச்சத்தை அடைந்தது.

அத்தகைய சிறப்பு மிக்க மனிதருக்கு இந்த விருது வழங்குவது மிகவும் பொருத்தமாகும். இந்த விருது 1 கோடி ரூபாய் பணம், சான்றிதழ், பதக்கம் மற்றும் தறியில் நெய்த பாரம்பரிய துணி, கைவினைப் பொருட்களை கொண்டது ஆகும். இந்த தகவலை இந்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்