Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் பணிக்கு வந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் தற்கொலை முயற்சி

மார்ச் 24, 2021 05:37

சேலம்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார் குட்டியா (வயது 31). மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரரான இவர் சத்தீஷ்கர் கம்பெனியில் இருந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தேர்தல் பணிக்காக சேலம் வந்தார்.பின்னர் பறக்கும் படை நிலை குழுவினருடன் இணைந்து சேலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார். இரவில் சேலம் லைன்மேடு பகுதியில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் தங்கி இருந்தார். வழக்கம் போல பணியை முடித்த அவர் நேற்றும் சமுதாய கூடத்தில் இரவில் தங்கினார்.

இன்று அதிகாலை 4 மணி அளவில் கண் விழித்த அவர் திடீரென துப்பாக்கியை எடுத்து தனது கழுத்தில் சுட்டுக் கொண்டார். பின்னர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதைப் பார்த்த அவருடன் தங்கி இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கத்தினர். உடனே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் அன்னதானப்பட்டி போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மகேஷ்குமார் குட்டியாவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் துப்பாக்கியால் சுட்டு எதற்காக தற்கொலை முயற்சி செய்தார்? என்பதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அவருடன் தங்கியிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கதறிய படி சேலத்திற்கு விரைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்