Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீமானுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்டு உத்தரவு

மார்ச் 24, 2021 05:38

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக அரசையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதையடுத்து அவர் மீது, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முதல்-அமைச்சர் சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.  அதில், முதல்-அமைச்சருக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சீமான் பேசியுள்ளார் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ், ‘ஏற்கனவே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அதே கோரிக்கையுடன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்’ என்று வாதிட்டார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘மனுதாரர் சீமானுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்