Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலையோரம் சாக்கு மூட்டையில் வீசப்பட்டு கிடந்த ரூ.1 கோடி பணம்

மார்ச் 24, 2021 09:20

திருச்சி:தமிழகம் சட்டமன்றத்தேர்தல் தேதியை கடந்த மாதம் 26-ந்தேதி அறிவித்தது. தலைமை தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.இதையடுத்து  வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் சப்ளை செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படை, கண்காணிப்பு குழு, வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதில் உரிய ஆதாரம் இல்லாமல் எடுத்து செல்லம் பணம், பரிசு பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்த தேர்தலில் தமிழகத்தில் இதுவரை மொத்தம் ரூ.265 கோடி மதிப்புள்ள நகை, பணம், பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் பணம் மட்டுமே ரூ.115 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே சாலையோரம் சாக்கு மூட்டையில் கட்டு, கட்டாக கேட்பாரற்று கிடந்த ரூ.1 கோடி பணத்தினை நேற்று இரவு தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்.திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே திருச்சி-கரூர் சாலையோரம் நேற்றிரவு 8 மணிக்கு 2 கார்களில் வந்தவர்கள், சாலையோரம் காரை நிறுத்தி விட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். .

உடனே அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் இது பற்றி பெட்டவாய்த்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசாரை கண்டதும் ஒரு கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து பறந்து சென்று விட்டது. மற்றொரு காரில் வந்த முசிறி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ரவிச்சந்திரன், சத்தியராஜா (43), ஜெயசீலன்(46), சிவக் குமார் (36) போலீஸ் பிடியில் சிக்கி கொண்டனர்.இந்த நேரத்தில் காரின் அருகாமையில் கிடந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது போலீசாருக்கு தலை சுற்றியது. அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. 

அதனை எண்ணிப் பார்த்த போது ரூ.1 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது எங்களுக்கும் பணம் வீசி சென்றவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் தனியாக வந்தார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை. நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோம் என தெரிவித்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பணத்தை கைப்பற்றினர்.

பின்னர் அந்த ரூ.1 கோடி பணமும் கருவூலத்தில் இன்று அதிகாலை ஒப்படைக்கப்பட்டது. கேட்பாரற்று கிடந்த பணம் யாருடையது என பெட்டவாய்த்தலை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அ.தி.மு.க. நிர்வாகிகள் வந்த கார் முசிறி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் விசா ரணை நடந்து வருகிறது.

தலைப்புச்செய்திகள்