Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு ரூ.17 லட்சம் மதிப்பில் நவீன கருவிகள்: லால் பாத்லேப், ஆர்.எம்.டி அறக்கட்டளை இணைந்து வழங்கின

மார்ச் 24, 2021 04:42

சென்னை:ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கரோனா சிகிச்சை வார்டுக்கான நவீன மருத்துவ உபகரணங்களை குர்காவ்னைச் சேர்ந்த லால் பாத்லேப் என்கிற நிறுவனம், சென்னை ஆர்.எம்.டி வலி மற்றும் நோய்த் தடுப்பு சிகிச்சை அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கியது. இந்த மருத்துவ உபகரணங்களின் மதிப்பு ரூ.17 லட்சமாகும்.கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில், மக்கள் மீண்டும் முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கான நவீன மருத்துவ உபகரணங்களை வழங்க குர்வ்கானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லால் பாத்லேப் அறக்கட்டளை முன்வந்துள்ளது.லால் பாத்லேப் நிறுவனம், இந்தியா முழுவதும் பரிசோதனை மையங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த மையங்கள் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கான பரிசோதனைகளை அளித்து வருகின்றன.

லால் பாத்லேப் அறக்கட்டளை, சென்னையைச் சேர்ந்த RMD வலி மற்றும் நோய்த் தடுப்பு சிகிச்சை அறக்கட்டளை மூலம் இந்தக் கருவிகளை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை வார்டுக்கு அளித்தது. இதன் மதிப்பு சுமார் 17 லட்சம் ரூபாயாகும்.RMD வலி மற்றும் நோய்த் தடுப்பு சிகிச்சை அறக்கட்டளை சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சுமார் 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தலைவர் மருத்துவர் தேரணிராஜனிடம் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், லால் பாத்லேப் நிறுவனத்தின் சார்பில், வரதராஜன் வேணு, டாக்டர் சரண்யா மோகன் ஆகியோரும், RMD வலி மற்றும் நோய்த் தடுப்பு சிகிச்சை அறக்கட்டளையின் சார்பில் டாக்டர் ரிபப்ளிக்கா ஶ்ரீதர், ராஜேஸ்பாபு, இம்மானுவேல், ஜோஸ்பின் ஜேசுராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய மருத்துவர் தேரணிராஜன், மருத்துவமனைகளுக்கான நவீனகருவிகளின் தேவை அதிகமாக உள்ளது. லால் பாத் லேப் நிறுவனத்தால் அது நிறைவேறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பூசிகளால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு, 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரையிலான காய்ச்சல்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை'' என்று கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்