Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராயபுரம் பொதுமக்கள் சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு

மார்ச் 25, 2021 04:14

திருப்பூர்: திருப்பூர் ராயபுரம் அணைமேடு பகுதியில் 200 குடும்பங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதி மக்களின் இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறி அப்பகுதியினர் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், தங்கள் பகுதிக்கு குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறியும், தற்போது சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு, சாக்கடை வசதி என அடிப்படை வசதிகள் கிடையாது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்கு கேட்க மட்டும் அரசியல் வாதிகள் வருகின்றனர். அப்போது மட்டும் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கின்றனர். அதன்பின்னர் கண்டுகொள்வதே இல்லை. எங்களின் பிரச்சனைகள் 4 தலைமுறைகளாக தொடர்கிறது.

குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மட்டும்தான் எங்களிடம் உள்ளன. எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. திருப்பூர் மாநகரின் பிரதான பகுதியில் வாழ்ந்தாலும், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் தனித்தீவில் வாழ்வதை போன்றுதான் உணர்கிறோம். எனவே வீடுகளில் கருப்பு கொடி கட்டி, சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளோம் என்றனர்.

தலைப்புச்செய்திகள்