Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திண்டுக்கல் அருகே பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருட்டு

மார்ச் 25, 2021 04:19

சின்னாளப்பட்டி:திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் சின்னாளப்பட்டி பிரிவில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான லட்சுமி நாராயணசாமி கோவில் உள்ளது. பிருந்தாவன தோப்பு என்று அழைக்கப்படும் இந்த கோவில் சின்னாளப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மற்ற கோவில்களுக்கு எல்லாம் முதன்மையானதாக விளங்கி வருகிறது. சித்திரை மாதம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறும். மேலும் கோவில் திருவிழாக்களில் கரகம் ஜோடிப்பது, சுவாமி புறப்பாடு நடைபெறுவது இங்கிருந்துதான் நடைபெறும். இக்கோவிலில் நேற்று இரவு பூசாரி நாகராஜ் பூஜைகளை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளை கோவில் அருகே நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இன்று அதிகாலை வந்து பார்த்த போது பக்கவாட்டு சுவரை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்திருந்தது தெரிய வந்தது. கொள்ளையர்கள் கோவில் கருவறைக்குள் புகுந்து அங்கிருந்த ராமர், லெட்சுமணன், சீதை ஆகியோரது ஐம்பொன் சிலைகளை திருடியுள்ளனர். மேலும் சங்கு சக்கரம், செப்பு பாத்திரங்கள், பூசாரியின் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து சின்னாளப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் பல லட்சம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் தடயவியல் நிபுணர்களை கொண்டும் சோதனை நடத்தப்பட்டது. கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை போன சம்பவம் தெரிந்ததும் அங்கு ஏராளமான பக்தர்கள் குவியத் தொடங்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்