Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இ.பி.எஸ் நாளை மறுநாள் குமரியில் பிரசாரம்

மார்ச் 25, 2021 04:20

நாகர்கோவில்: தமிழக சட்டசபைக்கு வருகிற 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்தனர். மேலும் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அகில இந்திய பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

இதுபோக வேட்பாளர்களும் தனித்தனியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தலைவர்கள் வருகையின் மூலம் குமரி மாவட்ட தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை (வெள்ளிக்கிழமை) இரவு குமரி மாவட்டம் வர இருப்பதாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கூறினார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை இரவு குமரி மாவட்டம் வருகிறார். அன்றைய தினம் நாகர்கோவிலில் உள்ள சகானா ஓட்டலில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் 27-ந் தேதி (சனிக்கிழமை) காலை செட்டிகுளம் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன்பிறகு தோவாளையிலும், ஆரல்வாய்மொழியிலும் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்கிறார் என்று கூறினார். குமரி மாவட்டம் வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அ.தி.மு.க.வினர் சிறப்பான ஏற்பாடு செய்து வருகிறார்கள். மேலும் அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்