Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடிப்படை வசதி கோரி சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு - பொதுமக்கள் முடிவு

மார்ச் 25, 2021 04:26

நாகப்பட்டினம்:நாகை-நாகூர் மெயின் ரோட்டில் சந்திராகார்டன் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 121 மனைகள் அமைந்துள்ளது. 600-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடியிருப்பு பகுதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இதுநாள் வரை குடிநீர் வசதி, சாலை வசதி, தெருமின்விளக்கு வசதி, பாதாளசாக்கடை வசதி என்று எந்த அடிப்படை வசதியும் இல்லை.

இவ்வாறு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத இந்த பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கடந்த 5 ஆண்டு காலமாக மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் என சம்பந்தப்பட்ட எல்லா துறையிடமும் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரை எவ்வித பயனும் இல்லை. இதையடுத்து இந்த பகுதி மக்கள் வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக தங்களது குடியிருப்பு பகுதியில் பேனர்கள் வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ‘சந்திரா கார்டன் உருவாக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.

நகராட்சியில் உரிய அனுமதி பெற்று குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இது நாள்வரை எந்தவித அடிப்படை வசதியும் இங்கு இல்லை. இரவு நேரங்களில் 6 மணிக்கு மேல் யாரும் எங்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே செல்லவும் முடியாது. குடியிருப்பு பகுதிக்குள் வரவும் முடியாது. தெருவிளக்கு வசதி இல்லாத காரணத்தால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணபடும்.மழை பெய்தால் தண்ணீர் வடிய வடிகால் வசதி இல்லாத காரணத்தால் குடியிருப்பு பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்துவிடும். ஆனால் நகராட்சிக்கு வரி செலுத்துகிறோம். பாதாள சாக்கடை இணைப்பு இல்லை.

ஆனால் பாதாள சாக்கடை இணைப்பு வரியை நகராட்சி வசூல் செய்கிறது.அடிப்படை வசதி கோரி பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் வேறு வழி இல்லாமல் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு எடுத்துள்ளோம். எங்கள் பகுதிக்கு வாக்குகள் கேட்டு எந்த கட்சி வேட்பாளர் வந்தாலும் ஆதரவும் தெரிவிக்க மாட்டோம். எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டோம். ஆனால் வாக்குப்பதிவு தினத்தில் வாக்கு செலுத்தும் இடத்திற்கு செல்லாமல் தேர்தலை புறக்கணிப்போம்’ என்றனர். இந்த பகுதி மக்களின் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக நாகை-நாகூர் பிரதான சாலையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்