Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மம்தா போட்டியிடும் தொகுதியில் அமித்ஷா அதிரடி பிரசாரம்

மார்ச் 28, 2021 11:29

கொல்கத்தா:மேற்குவங்க சட்டசபை தேர்தலில் முதல்- மந்திரி மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார் இது அவருடைய வழக்கமான தொகுதி அல்ல. ஒரு சவாலுக்காக நந்திகிராம் தொகுதியை அவர் இந்த தடவை தேர்ந்தெடுத்துள்ளார்.மம்தா பானர்ஜியின் நீண்ட கால நெருங்கிய அரசியல் உதவியாளராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. இவர் சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

வழக்கமாக சுவேந்து அதிகாரிதான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். பா.ஜனதாவுக்கு சென்ற அவர், மம்தா பானர்ஜி இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்று சவால்விட்டார்.இந்த சவாலை ஏற்றுதான் மம்தா பானர்ஜி நந்திகிராமில் நிற்கிறார். இதில் எப்படியாவது மம்தாவை வீழ்த்த வேண்டும் என்று பா.ஜனதா வியூகம் வகுத்து செயல்படுகிறது. பா.ஜனதாவின் தலைவர்கள் பலரும் அங்கு முகாமிட்டு மம்தாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

கடந்த 24-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி, நந்திகிராம் தொகுதி அருகே உள்ள கந்தி என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.நந்திகிராம் தொகுதியை குறிவைத்துதான் அங்கு அவருடைய கூட்டம் நடைபெற்றது. அடுத்ததாக உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்கிறார்.மம்தா பானர்ஜி இன்று முதல் 3 நாட்கள் நந்திகிராமிலேயே தங்கி இருந்து பிரசாரம் செய்ய உள்ளார். அவர் 2 ரோடு ஷோ நிகழ்ச்சி உட்பட 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இன்று மாலை 4 மணிக்கு நந்திகிராம் தொகுதிக்கு வரும் அவர், கட்சி கூட்டத்தில் பேசுகிறார். அதன் பிறகு பைருலியா செல்கிறார். இங்குதான் அவர் பிரசாரம் மேற்கொள்ளும் போது காலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு சக்கர நாற்காலியில்தான் அவர் வலம் வந்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.இன்று முதல் 3 நாட்களும் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்கு போட்டியாக செவ்வாய்க்கிழமை அமித்ஷா நந்திகிராமில் பல இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். பிரமாண்ட ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.

மம்தாவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற திட்டத்தில் மத்திய மந்திரி தர்மேந்திரபிரதான், நந்திகிராம் தொகுதியிலேயே முகாமிட்டு இருக்கிறார். பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தியும் அங்கு முகாமிட்டு மம்தாவுக்கு எதிராக ஆதரவு திரட்டி வருகிறார். இது சம்பந்தமாக பா.ஜனதா சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் இந்த தொகுதியில் மம்தா வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநில பா.ஜனதா மூத்த தலைவர் கைலாஸ் விஜய் வர்கியா கூறும்போது, ‘‘மம்தா பானர்ஜியின் தோல்வி உறுதியாகிவிட்டது. அவர் நம்பிக்கையை இழந்து விட்டார். எனவேதான் பா.ஜனதா பிரமுகர்களை பேரம் பேசி இழுக்க முயற்சிக்கிறார்’’ என்று கூறி உள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்