Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரே‌ஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்- கனிமொழி 

மார்ச் 28, 2021 11:39

விளாத்திகுளம்:தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் இன்று பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:பாராளுமன்ற தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தீர்கள். அதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.தி.மு.க. ஆட்சி அமையும் போது பல்வேறு நலத்திட்டங்களை செய்யலாம். எதிர்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சி தடை செய்து கொண்டே இருக்கும்.

அ.தி.மு.க. ஆட்சியில் ரே‌ஷன் கடை பற்றி உங்களுக்குத் தெரியும். எந்த பொருள் கேட்டாலும் இல்லை, இல்லை என்ற பதில் மட்டுமே வருகிறது. வேலை வாய்ப்பு இல்லை, தொழிற்சாலைகள் இல்லை, இந்த நிலைமை எல்லாம் மாற்ற வேண்டும் என்று சொன்னால் நம்ம ஆட்சி, நம்ம எம்.எல்.ஏ., நம்ம எம்.பி., என்ற நிலை இருந்தால்தான் நமக்கு உண்டான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியும்.

இந்த பகுதியில் குடிமராமத்து திட்டம் என்று பல்வேறு கண்மாய்களில் வேலையை செய்யாமல் பணம் எடுத்து எடுத்துவிட்டனர். நமது ஆட்சி வந்தவுடன் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ரே‌ஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்.பெண்கள் அனைவரும் வீட்டில் கடுமையாக வேலை செய்கிறோம். ஆகையால்தான் குடும்பத் தலைவிகளுக்கு மதிப்பூதியம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த நகை கடன்கள் ரத்து செய்யப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும். மகளிர் சுய உதவிகுழு மீண்டும் தொடங்கப்பட்டு மகளிர்களுக்கு கடன் சுழல் நிதி கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படும்.தமிழக அரசில் காலியாக உள்ள 3.50 லட்சம் காலிப் பணியிடங்களை நம் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு 75% தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும். பம்பை ஆறு அச்சன்கோவில் வைப்பாறு இணைப்பு திட்டம், தாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்படும் என்று கனிமொழி பேசினார்.

தலைப்புச்செய்திகள்