Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரள கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டார்கள் எனும் குற்றச்சாட்டு தவறானது: பியூஷ் கோயல்

மார்ச் 29, 2021 02:00

கொச்சி :  உத்தரப் பிரதேசம், ஜான்ஸி நகருக்கு ரயிலில் வந்த கேரள கன்னியாஸ்திரிகள் இருவரை பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டு தவறானது. பினராயி விஜயன் தவறான தகவல்களைத் தெரிவிக்கிறார் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்திலிருந்து கன்னியாஸ்திரிகள் இருவரும், இரு பெண்களும் கடந்த 19-ம் தேதி ஹரித்துவார்-பூரி உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒடிசா மாநிலம் பூரி நகருக்குச் சென்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜான்ஸி நகருக்கு ரயிலில் வந்தபோது, ரயிலில் இருந்த பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்த சிலர், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் மதமாற்றம் செய்து இரு பெண்களை அழைத்துச் செல்கிறார்கள் எனக் கூறி அவர்களை அவமானப்படுத்தி அவர்களைப் பாதி வழியிலேயே ரயிலில் இருந்து இறக்கிவிட்டனர். இதுகுறித்து ரயில்வே போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த கன்னியாஸ்திரிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை,

அவர்கள் முறையான அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அடுத்த ரயிலில் கன்னியாஸ்திரிகளையும், அவருடன் வந்த இரு பெண்களையும் ரயில்வே போலீஸார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த சர்ச்சை தொடர்ந்து வந்தது. இந்நிலையில் கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கொச்சி நகருக்கு வந்தபோது நிருபர்களுக்குப் அளித்த பேட்டியில் கூறியதாவது:உத்தரப் பிரதேசத்தில் ஜான்ஸி நகரில் கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது.

கன்னியாஸ்திரிகள் மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை. கேரள முதல்வர் கூறும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, தவறானவை.உண்மையில் நடந்த சம்பவம் என்னவென்றால், கன்னியாஸ்திரிகள் ரயிலில் ஜான்ஸி நகருக்கு வந்தபோது, ரயிலில் இருந்த சிலர், கன்னியாஸ்திரிகளுடன் இரு பெண்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய அழைத்துச் செல்கிறார்கள் என நினைத்தனர். இது தொடர்பாக ரயில்வே போலீஸாரிடம் புகாரும் அளித்தனர்.

அந்தப் புகாரைப் பெற்ற ரயில்வேபோலீஸார் நடத்திய விசாரணையில் கன்னியாஸ்திரிகள் மீது எந்தத் தவறும் இல்லை, அவர்கள் முறையான டிக்கெட்டுகளுடன் பயணிப்பவர்கள் எனத் தெரியவந்தது. புகாரும் தவறானது எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கன்னியாஸ்திரிகள் அடுத்த ரயிலில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், யாரும் கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதல் நடத்தவும் இல்லை, அவர்களைத் துன்புறுத்தவும் இல்லை என பியூஷ் கோயல் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்