Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஊரடங்கிற்கு அவசியமில்லை: சுகாதாரத்துறை செயலர்

மார்ச் 29, 2021 02:13

சென்னை : சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா படுக்கை வசதிகளை, ராதாகிருஷ்ணன்,  ஆய்வு செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி:கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக, சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் உள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள, 46 மாவட்டங்களில், தமிழகத்தில், இந்த மூன்றும் தான் இடம் பெற்றுள்ளன.தற்போது வரை, தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களில், இரண்டு சதவீதம் பாதிப்பு உள்ளது.சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தேவையான படுக்கை வசதிகள் உள்ளன.

எனவே, குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கு மட்டுமே செல்வதை நிறுத்த வேண்டும்.
தமிழகம் முழுதும், கொரோனா கட்டுப்பாடு பகுதிகளை கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, நோய் கட்டுப்பாடு பணிகளை தீவிரப்படுத்த, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது, கிருஷ்ணகிரிமாவட்டத்தை தவிர, மற்ற மாவட்டங்களில், கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.குடிசைப் பகுதிகளில் குறைவாகவும், கூட்டுக் குடியிருப்பு பகுதிகளில் அதிகமாகவும், தொற்று பரவி வருகிறது என, ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில், 18 வயது முதல், 45 வயது வரை உள்ள, 51 சதவீதம் பேரும், 45 வயதுக்கும் மேற்பட்ட, 51 சதவீதம் பேரும், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதே போல், 45 வயதிற்கு மேற்பட்டவர்களின் இறப்பு சதவீதம், 90 ஆக உள்ளது. 18 வயது முதல், 45 வயது வரையிலானவர்களில், ஒன்பது சதவீதம் பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கடந்தாண்டு, எந்த மருந்தும் இல்லாமல் இருந்ததால், மருத்துவ வசதிகளை அதிகப்படுத்த மட்டுமே, ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தற்போதைய சூழலில், தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால், அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் படிப்படியாக கட்டுப்பாடு விதிக்கப்படும். தற்போது வரை, எந்த முடிவும் எடுக்கவில்லை. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்