Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்நாடு ஆணழகனாக 8 முறை தேர்வு: சென்னை போக்குவரத்துக் காவலரின் சாதனை

மார்ச் 29, 2021 02:15

சென்னை: மிஸ்டர் மெட்ராஸ் எண்ணிக்கை அதிகம், மிஸ்டர் தமிழ்நாடு எட்டு முறை பெற்ற பெருமைக்குரியவர் அடையாறு போக்குவரத்துக் காவலர் புருஷோத்தமன். 25 ஆண்டுகளுக்கு மேல் ஆணழகனாகத் திகழும் இவர் தற்போது அகில இந்திய ஆணழகன் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.சென்னை அடையாறு போக்குவரத்துக் காவல்துறையில் தலைமைக் காவலராக இருப்பவர் புருஷோத்தமன். கடந்த 2002-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணியில் இணைந்தார்.

காவல்துறையில் இணைவதற்கு முன்னரே தனது 18 வயது முதல் பல்வேறு ஆணழகன் போட்டிகளில் பங்கு பெற்று மிஸ்டர் சென்னை, மிஸ்டர் தமிழ்நாடு எனப் பட்டங்களைப் பெற்றுள்ளார். 2000 மற்றும் 2001-ம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு வென்ற நிலையில் 2002-ம் ஆண்டு காவல் பணியில் இணைந்தார். காவல் பணியில் இருந்தபோதும் 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் என மொத்தம் 7 ஆண்டுகள் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு 7 முறை மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றார்.

இதற்கிடையில், கடந்த 2008-ம் ஆண்டு இவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டது. இதனால், புருஷோத்தமனுக்கு எந்தவித கடுமையான உடற்பயற்சியும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. ஆனாலும், அதிலிருந்து மீண்டு வந்து கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டார். இந்நிலையில், 2018-ம் ஆண்டு சென்னையில் மிஸ்டர் ஆணழகன் தமிழ்நாடு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்துகொண்ட புருஷோத்தமன் 80 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 

இந்திய, ஆசிய அளவில் ஆணழகனாகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற லட்சியத்தோடு உழைக்கும் புருஷோத்தமன் தற்போது அதற்கான நிலையை எட்டியுள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல போட்டிகளில் ஆணழகனாகத் தேர்வான அவர் இந்திய ஆணழகனாகவும் தேர்வு செய்யப்பட்டு தமிழக காவல்துறைக்கே பெருமை சேர்ப்பார் என உடன் பணியாற்றும் காவல் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தற்போது வரும் ஏப்ரல் 4ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள ஃபெடரேஷன் கோப்பை மற்றும் ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்திய அளவிலான ஆணழகன் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஒருவர் முதன்முறையாக தேசிய ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வாகியிருப்பது இதுவே முதல் முறை. இந்தச் சாதனையை அடையாறு போக்குவரத்து தலைமைக் காவலர் புருஷோத்தமன் படைத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்