Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கின்னஸ் பூங்காவில் 400 மரக்கன்றுகள் நடவு

மார்ச் 30, 2021 12:35

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘மக்களாட்சியை விதைப்போம், 100 சதவீதம் வாக்களிப்போம்’ என்ற மைய கருத்தில் ஊட்டி அருகே குருத்துக்குளியில் உள்ள கின்னஸ் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ பேசும்போது கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன்பு குருத்துக்குளி கின்னஸ் பூங்காவில் அதிக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. தற்போது சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று(அதாவது நேற்று) நெடுஞ்சாலைத்துறை சார்பில் 400 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.

வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை ஆகும். தேர்தல் நாளன்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தபடி அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்து வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக விடுமுறை அளிக்கப்படுகிறது.இதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த தேர்தலை ஒப்பிடும்போது குருத்துக்குளி கிராமத்தில் வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது.

இதை கருத்தில் கொண்டு இப்பகுதியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை வாக்களிக்க செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு, ஊட்டி தாசில்தார் குப்புராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்