Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீலகிரியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் வெப் ஸ்டீரிமிங்- நுண்பார்வையாளர்கள் மூலம் கண்காணிப்பு

மார்ச் 31, 2021 02:03

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பதட்டமான வாக்கு சாவடிகள் இணைதள ஒளிபரப்பு மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பதட்டமான வாக்கு சாவடிகள் இணைதள ஒளிபரப்பு மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 தொகுதிகளில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 112 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் இணைதள ஒளிபரப்பு(வெப் ஸ்டீரிமிங்) மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

அதேபோல் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் இணைதள ஒளிபரப்பு (வெப் ஸ்டீரிமிங்) மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

3 தொகுதிகளிலும் 4,168 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். போக்கு வரத்து வசதிகள் குறைவாக உள்ள வாக்காளர்கள் தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதற்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனப்பகுதி அருகில் உள்ள வாக்காளர்களுக்கு பஸ் வசதி கோரினால், மாவட்ட நிர்வாகம் மூலம் தேவையான பஸ் வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தேர்தல் ஆணையம் வாக்களிக்க கூடுதலாக 1 மணி நேரம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்க உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த முறை தெர்மல் ஸ்கேனிங், சானிடைசர் மற்றும் கையுறைகள் வழங்க கூடுதலாக இரு பணியாளர்கள் இருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்