Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கமல்ஹாசன்- சரத்குமார் இணைந்து ஓட்டு சேகரிப்பு

ஏப்ரல் 03, 2021 08:45

கோவை:கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே. கட்சியுடன் இணைந்து சட்டசபை தேர்தலை சந்திக்கிறது கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் அவரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஏற்கனவே ஒருமுறை பிரசாரம் மேற்கொண்டார். இந்தநிலையில் நேற்று தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தெப்பக்குளம் மற்றும் தெலுங்கு வீதியில் கமல்ஹாசனுடன் இணைந்து சரத்குமார் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் சரத்குமார் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கங்கள் மாறி, மாறி ஆட்சி செய்து வரும் நிலையில் ஒரு மாற்றம் வேண்டும் என்ற அடிப்படையில் எங்களது கூட்டணியை உருவாக்கி உள்ளோம். நல்லவர்கள், வல்லவர்கள் மற்றும் தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்.நாகரீக அரசியல் செய்யும் கூட்டணியாக உள்ளோம். தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, தமிழக முதல்வர் மற்றும் அவரது தாயாரை பற்றி அவதூறாக பேசியுள்ளார்.

அடுத்த முதல்வராக வருவேன் என கூறி வரும் தலைவரின் மகன் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி மரணங்களுக்கு பிரதமர் மோடியே காரணம் என பேசி வருகிறார். இதுபோன்று நாங்கள் யாரை பற்றியும் அவதூறு பேசுவதில்லை.தமிழகத்தில் மாற்றம் எதற்காக தேவைப்படுகிறது என சொன்னால் மஞ்சள் பையுடன் வந்தவர்கள் தற்போது பெட்டி, பெட்டியாக பணம் வைத்துள்ளனர். அதற்காகவே வருமான வரி சோதனை நடைபெறுகிறது. எங்கிருந்து வந்தது இந்த பணம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த நிலை மாற வேண்டும.

பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன், கமல்ஹாசன் தேர்தலுக்கு பிறகு சென்னைக்கு சென்று விடுவார் என கூறி உள்ளார். படித்தவன், பண்புள்ளவன், மக்களை பற்றி சிந்திப்பவன் எங்கிருந்தாலும் வேலை செய்ய முடியும். கோவை தெற்கு தொகுதியை முன்னுதாரணமாக மாற்றும் திறமை படைத்தவர் கமல்ஹாசன். எனவே அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.

தலைப்புச்செய்திகள்