Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரவலால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு தடை

ஏப்ரல் 03, 2021 11:20

பெங்களூரு :கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ளது. இந்த
நிலையில் கர்நாடக அரசு மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதுகுறித்து தலைமை செயலாளர் ரவிக்குமார் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:கர்நாடகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையில் நேரடி வகுப்பு மற்றும் வித்யாகம வகுப்புகள் ரத்து  செய்யப்படுகின்றன.

அதே நேரத்தில் 10 முதல் பி.யூ.கல்லூரி வரை நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். ஆனால் இதில் மாணவர்களின் வருகை கட்டாயமல்ல.கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளின் வகுப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் தேர்வு நடைபெறும் பல்கலைக்கழகம், மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.உண்டு உறைவிட பள்ளிகள் மூடப்படுகின்றன. அதே நேரத்தில்
எஸ்.எஸ்.எல்.சி. முதல் பி.யூ. கல்லூரி வரை வகுப்புகள் நடைபெறும்.

கோவில்கள், வழிபாட்டு தலங்களில் தனி நபர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார். ஆனால் கூட்டமாக சேர அனுமதி இல்லை.50 சதவீத இருக்கைகள் பயன்படுத்த தடை அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் உடற்பயிற்சி கூடம், நிகழ்ச்சி அரங்கம், கிளப் இல்லம், நீச்சல் குளம் மூடப்படுகிறது.பிற பகுதிகளில் உள்ள நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்படுகின்றன.எந்த காரணத்திற்காகவும் ஊர்வலங்கள், போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. அரசு-தனியார் பஸ்களில் இருக்கைகளில் அமரும் வகையில் மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்கள் முடிந்தவரை ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.பெங்களூரு, பெங்களூரு புறநகர், மைசூரு,கலபுரகி, தட்சிண கன்னடா, உடுப்பி, பீதர் மற்றும் தார்வார் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், கலபுரகி, தட்சிண கன்னடா, உடுப்பி, பீதர், உப்பள்ளி-தார்வாரில் உள்ள கேளிக்கை விடுதிகள் (பப்புகள்), மதுபான விடுதிகள், உணவகங்களில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

இங்கு முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் விடுதிகள் மூடப்படும்.வணிக வளாகங்கள், கூரைகளால் மூடப்பட்ட சந்தைகள், பலசரக்கு கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறினால் அத்தகைய கடைகள் மூடப்படும்.மதம், ஆன்மிக விழாக்களில் மக்கள் கூடுவதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.

முகக்கவசம் அணிவது தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள அபராதம் விதிக்கும்  உத்தரவு, போலீஸ் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களால்தீவிரமாக அமல்படுத்தப்படும்.இந்த விதிமுறைகளை பெங்களூரு மாநகராட்சி உள்பட அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்