Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ.விற்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுவதை ஏற்கவில்லை: பா.சிதம்பரம்

ஏப்ரல் 11, 2019 08:13

சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  
மோடி ஆட்சியில் நமது நாடு பாதுகாப்பாக இருந்தது போலவும், 2004-ல் இருந்து 2014வரை மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது நாடு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது போலவும் கட்டு கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். 

மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எந்த போரும் நடக்கவில்லை. போர் பதட்ட சூழ்நிலையும் ஏற்படவில்லை. எல்லை பாதுகாப்பான நிலையில் இருந்தது. பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்து இருந்தது. பாதுகாப்பு படை வீரர்கள், பொது மக்கள் உயிரிழப்பு குறைந்து இருந்தது. 

ஆனால் மோடி ஆட்சியில் ஊடுருவல் அதிகரித்து உள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் பொது மக்கள் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. எப்போதும் போர் பதட்ட சூழ்நிலை நிலவுகிறது. எல்லையில் வசிக்கும் 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க நாடு இப்போது பாதுகாப்பாக இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி எதையாவது சொல்லலாம். ஆனால் நாடு மிகுந்த பாதுகாப்பாக இருப்பதாக நான் கருத வில்லை. 

வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பாரதீய ஜனதாவுக்கு செல்வாக்கு இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுவதை நான் ஏற்கவில்லை. பொதுவாக கருத்து கணிப்புகளை நான் நம்புவதில்லை. கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் பொய்யாகி உள்ளன. எதிர்காலத்திலும் இது தவறாகத்தான் போகும். இந்த பாராளுமன்ற தேர்தல் என்பது 30 மாநிலங்களில் வெவ்வேறு அரசியல் சூழ்நிலையில் நடக்கிறது. 

உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி வலுவாக உள்ளது. காங்கிரஸ் அங்கு வலுவான நிலையில் போட்டியிடுகிறது. அங்கு பாரதிய ஜனதாவை முந்தி எதிர்பாராத வெற்றிகளை நாங்கள் பெறுவோம். 

உத்தரபிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பே நாங்கள் கூட்டணி வைக்க முயற்சித்தோம். ஆனால் மாயாவதி அதை விரும்பவில்லை. தேர்தல் முடிந்ததும் எங்கள் அணிக்கு மாயாவதி வருவார் என்று ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறி இருக்கிறார். தேர்தல் முடிவுகள் வந்ததும் மாயாவதி இறங்கி வருவார். எங்களுடன் கூட்டணி அமைப்பார். 

தொகுதி பங்கீட்டில் பாரதிய ஜனதா விட்டுக் கொடுத்து சென்றதாகவும் காங்கிரஸ் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும் கூறுவது தவறு. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவுக்கு 5 இடங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதே எண்ணிக்கையில்தான் கடந்த காலத்திலும் போட்டியிட்டது. தமிழ்நாட்டில் நாங்கள் அதிகபட்சமாக வளைந்து கொடுத்தோம். 9 இடங்களில் மட்டும் போட்டியிடுகிறோம். தி.மு.க. குறைந்தபட்சம் 20 இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறோம். இதற்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் போட்டியிட்டு இருக்கிறார்கள். 

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரசுடன் 48 இடங்களை சமமாக பகிர்ந்து கொண்டுள்ளோம். கர்நாடகாவிலும், காஷ்மீரிலும் வளைந்து கொடுத்து கூட்டணி ஏற்படுத்தி உள்ளோம். பீகார், ஜார்கண்டிலும் திருப்தியான கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறோம். கேரளாவில் கம்யூனிஸ்டை எதிர்த்து ராகுல் போட்டியிடுவதை தவறானதாக கருத முடியாது. ராகுல் போட்டியிடவில்லை என்றால் வேறு ஒரு காங்கிரஸ்காரர் போட்டியிட போகிறார். 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தெளிவாக உள்ளது. ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆனால் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் குழப்பமான நிலையில் இருக்கிறது என ப.சிதம்பரம் கூறினார்.

தலைப்புச்செய்திகள்