Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடி தமிழகம் வருகையால் தி.மு.க.வுக்கு தான் சாதகம் - உதயநிதி ஸ்டாலின்

ஏப்ரல் 03, 2021 12:46

கோவை:தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கோவையில் முகாமிட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.பொள்ளாச்சி, குறிச்சி, தொண்டாமுத்தூர், கோவை வடவள்ளி, இடிகரை ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்ததாக அ.தி.மு.க.வினர் பெருமையாக கூறுகின்றனர். ஆனால் நான் மதுரை பிரசாரத்துக்கு சென்றபோது அங்கு சென்று பார்த்தேன். ஒன்றும் இல்லை.

மதுரைக்கு கட்டிக் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செங்கல்லை கையோடு எடுத்து வந்துள்ளேன். வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாள் இந்த மருத்துவமனையை அவர்களிடம் ஒப்படைதது விடுகிறேன்.3 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதனால் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்கு சென்ற ஏராளமானோர் ஏ.டி.எம். மையத்தின் வாசலில் உயிரிழந்தனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாத காசாக பிரதமர் மோடி ஆக்கியது போல நீங்களும் பிரதமர் மோடியையும், முதல்வர் பழனிசாமியையும் செல்லா காசுகளாக ஆக்க வேண்டும். முதல்வர் பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தோற்பார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு ஊழல் செய்த அனைத்து அமைச்சர்களும் ஜெயிலுக்கு செல்வது உறுதி. கருத்துக்கணிப்பில் தி.மு.க. 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்திருந்தனர்.

பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசாரம் செய்த பின்னர் 180 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு முடிவு கட்ட வேண்டும். மோடிக்கு பாராளுமன்ற தேர்தலில் கொடுத்த தோல்வியை போல் இந்த சட்டசபை தேர்தலில் எடப்பாடிக்கும், மோடிக்கும் அளிக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு முடிவுரை எழுத வேண்டும்.நான் வெற்றி பெறவில்லை என்றாலும் நம் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும்.

நம்மை எதிர்த்து நிற்பது மோடி, நம் பக்கம் நிற்பது கலைஞர். இந்த தேர்தல் மோடிக்கும், கலைஞருக்குமான தேர்தல். இதில் கலைஞரை வெற்றி வெற்றி பெற வைக்க வேண்டும். இதற்காக நாம் உழைக்க வேண்டும். கலைஞரின் பேரனாக உங்களை கேட்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்

தலைப்புச்செய்திகள்