Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநகர பஸ்களில் பறக்கும் படையினர் திடீர் சோதனை 

ஏப்ரல் 04, 2021 08:52

சென்னை:தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (6-ந் தேதி) நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இன்றிரவு 7 மணியுடன் நிறைவு பெறுகிறது. பிரசார வியூகங்கள் மூலம் வாக்காளர்களை கவர்ந்து வாக்குகளை பெறும் பாணி ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் சூழலும் தொடர் கதையாக இருந்து வருகிறது.எனவே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சியினர் கையும், களவுமாக பிடிபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட பல கோடி ரூபாய் பணம், நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சென்னையில் 16 தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் 144 பறக்கும் படை குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனை, ரோந்து பணி என்று சென்னை நகர் முழுவதையும் கார்களில் வலம் வந்த வண்ணம் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள துணை ராணுவ படையினரும் பறக்கும் படை குழுவினருடன் இணைந்து வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால், கடைசிநேர பணப்பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கையில் பறக்கும் படையினர் தீவிரம் காட்டி உள்ளனர்.அந்தவகையில் பறக்கும் படையினர் நேற்று மாநகர பஸ்களில் அதிரடியாக ஏறி பயணிகளின் பைகளை சோதனையிட்டனர்.

கார்கள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் மட்டும் சோதனையிட்டு வந்தநிலையில் மாநகர பஸ்களை மறித்து பறக்கும் படையினர் ஏறியதால், டிரைவர், கண்டக்டர், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நீங்கள் பஸ்களில் சோதனை நடத்தலாமா? என்று பறக்கும் படை அதிகாரிகளிடம் கண்டக்டர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், தேர்தல் ஆணையம் மாநகர பஸ்களிலும் சோதனை நடத்த வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவு வழங்கி உள்ளது. எனவே அதற்கு நீங்களும், பயணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறி சோதனையை மேற்கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்