Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐ.டி. ரெய்டால் தி.மு.க.வுக்கு கூடுதலாக 25 இடங்கள் கிடைக்கும்-  ஸ்டாலின்

ஏப்ரல் 04, 2021 09:11

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். ஐஸ்அவுஸ் பகுதியில் நடந்த தெருமுனை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தம்பி உதயநிதி ஸ்டாலினை நீங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று வாக்கு கேட்க வந்துள்ளேன்.

தம்பி உதயநிதிக்கு நான் ஓட்டு கேட்க வந்திருக்கேன் என்றால் இப்போது மனசுலே என்ன ஓடிக்கிட்டு இருக்கிறது என்றால் நான் முதன் முதலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்றபோது தலைவர் கலைஞர் எனக்காக ஓட்டு கேட்டார். அது எனக்கு நினைவுக்கு வருகிறது.அப்போது அவர் என்ன சொன்னார் என்றால் தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். கடைசியாக ஆயிரம்விளக்கு தொகுதியில் ஓட்டு கேட்க வந்துள்ளேன். இங்கு இருக்கக் கூடிய மக்கள் ஊர் ஊராக போய் ஓட்டு கேட்கிற நீ உன் பிள்ளைக்கு ஓட்டு கேட்க மாட்டாயா? என்று நீங்கள் கேட்டு விடக்கூடாது என்பதற்காக நான் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன் என்று கூறி இருந்தார்.

அதே மாதிரிதான் நானும் தமிழ்நாடு முழுவதும் ஓட்டு கேட்டு விட்டேன்.அதனால் இப்போது இங்கு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். தம்பி உதயநிதி சொல்லும்போது நீங்கள் மற்ற தொகுதியை பார்த்து கொள்ளுங்கள். இந்த தொகுதிக்கு பிரசாரத்துக்கு வேண்டாம் என்று சொன்னார். நான் பார்த்துக் கொள்கிறேன். இங்கு வெற்றி உறுதியாகி விட்டது என்று கூறினார்.நீ அப்படி சொல்லலாம். ஆனால் இந்த தொகுதியில் மக்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். எனவே நிச்சயமாக நான் வந்து ஓட்டு கேட்பேன் என்று கூறினேன். அதன்படி நானே முடிவு செய்து இங்கு பிரசாரத்துக்கு வந்துள்ளேன்.இன்று பிரசாரத்தின் கடைசி நாள். ஆளுங்கட்சி ஒருவித அச்சத்தோடு தோல்வி பயத்தோடு உள்ளது.

பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் கருத்து கணிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த கணிப்புகளை பொறுத்தவரைக்கும் நாம் அதை முழுமையாக ஏற்றுக்கொள்வது வழக்கம் அல்ல. எனவே நாம் நம்முடைய பணிகளைதான் செய்ய வேண்டும். அதைதான் கலைஞர் நமக்கு தொடர்ந்து சொல்லி தந்துள்ளார். அதைதான் இப்போதும் நாம் கடைபிடிக்கிறோம்.கருத்து கணிப்புகளை பார்த்து நாம் ஏமாந்து விட மாட்டோம். ஆனால் அந்த கருத்து கணிப்புகள் ஆளும் கட்சிக்கு இப்போது கிலியை உருவாக்கி உள்ளது. அந்த அச்சத்தின காரணமாக, தோல்வி பயத்தின் காரணமாக ஏதேதோ உளற ஆரம்பித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் பதவி போனது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஜெயிலுக்கு போன கதையெல்லாம் தெரியும். எனவே ஒரு ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் முதல்-அமைச்சராக இருக்க கூடியவர்கள் டான்சி வழக்கில் சிறைக்கு போன வரலாறுதான் அ.தி.மு.க.வின் வரலாறு.உங்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வருகிற 6-ந்தேதி மக்கள் தயாராக இருக்கிறார்கள்.2 நாட்களுக்கு முன்பு கூட எனது மகள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினார்கள். என்ன எடுத்தார்கள்? வந்து உட்கார்ந்தார்கள்.

காலை முதல் இரவு வரை உட்கார்ந்து டி.வி. பார்த்தார்கள்? டீ குடித்தார்கள்? பிரியாணி வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டார்கள்? அதன் பிறகு வீட்டை விட்டு சென்றார்கள். போகும்போது என்ன சொன்னார்கள் என்றால், உங்களுக்கு இன்னும் 25 “சீட்” அதிகம் கிடைக்கப்போகிறது என்று சொல்லி விட்டு போய் இருக்கிறார்கள் என்று ஸ்டாலின் பேசினார்.

தலைப்புச்செய்திகள்