Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரலாறு காணாத காட்டு தீ-தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்ப மத்திய அரசு உத்தரவு

ஏப்ரல் 04, 2021 11:40

டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு காட்டுத் தீ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் இதுவரை 964 இடங்களில் காட்டுத் தீ பற்றியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவு காடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 ஹெக்டேர் பரப்பளவு கருகி உள்ளது. காட்டுத் தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர், 2 பேர் காயமடைந்துள்ளனர். 7 விலங்குகளும் இறந்துள்ளன..காட்டுத்தீயை கட்டுப்படுத்த 12000 வனத்துறை பாதுகாவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீயணைப்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பவும், ஹெலிகாப்டர் வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக உள்துறை மந்திரி அமித் ஷா கூறி உள்ளார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வரும் நிலையில், முதல்வர் திராத் சிங் ராவத் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். காட்டுத் தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. தற்போது நிலவும் வானிலை மாநில அரசுக்கு சவாலாக உள்ளதாக மாநில மந்திரி ஹராக் சிங் ராவத் கூறினார். மேலும், முதலமைச்சரும் தானும் நிலைமையை தனித்தனியாக கண்காணித்து வருவதாகவும், ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கோடை காலத்தில் வனப்பகுதியில் தீ பரவுவது வழக்கமானதுதான். ஆனால் இந்த ஆண்டு, குளிர்கால மாதங்களில் போதிய மழையின்மை, தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த பயம் காரணமாக காடுகளில் நடமாட்டம் தடைசெய்யப்பட்டதால்,  மரக்கட்டைகள் உள்ளிட்ட எரியக்கூடிய பொருட்கள் காடுகளின் தரையில் குவிந்து கிடந்துள்ளன. குறிப்பாக பைன் மரத்தின் ஊசி போன்ற இலைகள் அதிக அளவில் குவிந்துள்ளன. இவை எளிதில் தீப்பற்றக்கூடியவை. கோடை காலத்தில் இந்த எரியும் பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் அழிக்கப்படுகின்றன. ஆனால் கடந்த ஆண்டில் அந்த பணி பாதிக்கப்பட்டது. இதுவும் காட்டுத் தீ அதிகரிப்பதற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்