Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என்.ஆர்.காங்கிரஸை வைத்து அதிகாரத்துக்கு வர பாஜக நினைக்கிறது

ஏப்ரல் 04, 2021 01:38

புதுச்சேரி:என்.ஆர்.காங்கிரஸை வைத்துக்கொண்டு அதிகாரத்துக்கு வர பாஜக நினைக்கிறது என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சரவணனை ஆதரித்து சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று பிரச்சாரம் செய்தார். முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே அவர் பிரச்சாரத்தைத் தொடங்கிப் பேசியதாவது:''மத்திய பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளாகப் புதுச்சேரியின் அதிகாரத்தைப் பறிக்கக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. புதுவை ஆளுநராகக் கிரண்பேடி பொறுப்பேற்ற பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்பட விடாமல் இன்னொரு நிர்வாகத்தை நடத்தினார்.

ஒரு எம்எல்ஏகூட இல்லாத பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து, தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சியைக் கவிழ்த்தார்கள்.புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்., அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மோடி அரசின் ஏவல் ஆட்களாகி விட்டனர்.புதுவையிலும் என்.ஆர்.காங்கிரஸையும் பொம்மை அரசாக பாஜக மாற்றிவிடும் நிலை ஏற்படும். அப்படிப்பட்ட பாஜகவுடன் என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. புதுச்சேரியில் கடந்த காலத்தில் பாஜக தனியாக வெற்றி பெற்றது கிடையாது.

ஆனால், இப்போது என்.ஆர்.காங்கிரஸை வைத்துக்கொண்டு அதிகாரத்துக்கு வர பாஜக நினைக்கிறது. இந்தியாவில் பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சியைக் கலைப்பார்கள். அல்லது ஆட்சியைச் சீர்குலைக்க முயற்சி செய்வார்கள்.புதுவையில் நடக்கவுள்ள தேர்தலில் மக்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பாஜகவைக் காலூன்ற விடக் கூடாது. புதுவையில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்களை வாங்கி பாஜவுக்கு வாக்களியுங்கள் என்று குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர். இது மோசமான அத்துமீறல்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

தலைப்புச்செய்திகள்