Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பணி நிறைவு பெற்று ஊர் திரும்பிய இராணுவ வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.

ஏப்ரல் 07, 2021 01:02

திருச்சி: மணப்பாறையில் பணி நிறைவு பெற்று ஊர் திரும்பிய இந்திய இராணுவ வீரர்களுக்கு, பட்டாசு வெடித்து மலர்  மாலை அணிவித்து பள்ளி கால நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னகோன்பட்டி பகுதியினை சேர்ந்த சவரிமுத்து மகன் ஜெயப்பிரகாசம்(38),  ஆலத்தூர் பகுதியினை சேர்ந்த துரை மகன் சுந்தரம்(38) ஆகியோர் பள்ளி பருவ நண்பர்கள்,  இருவரும் கடந்த 2002- ஆம் ஆண்டு பிப்ரவரி இந்திய இராணுவத்தின் 17-வது பிரிவு இன்ஜினியர் ரெஜிமென்ட்டில் தனது பணியைத் தொடங்கினார்கள். 

பெங்களூர், குல்மார்க்(ஜம்மு காஷ்மீர்), நாக்ரோட்டா(ஜம்மு காஷ்மீர்), செகந்திராபாத் (ஆந்திர பிரதேஷ்), லே(ஜம்மு காஷ்மீர்), டில்லி, அசாம், பட்டிண்டா(பஞ்சாப்) உள்ளிட்ட இடங்களிலும் தங்களது பணியினை இரவு பகல் பாராமல் அயராது உழைத்து தேசத்தைக் காத்து நிகழாண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி பணி  ஓய்வு பெற்று வீடு திரும்பினர். நாயக் ஜெயப்பிரகாசம் மற்றும் நாயக் சுந்தரம் இருவருக்கும் அ.சரவணபெருமாள், ப.ஏழுமலை ஆகியோர் தலைமையில் பாம்பாட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கால 2000-2001 மாணவ  நண்பர்கள் மேளதாளத்துடன், பட்டாசு வெடித்து இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இராணுவ வீரர்களுக்கு மலர் மாலை அணிவித்து மகிழ்வித்தனர். இதுவரை பணி ஓய்வு பெறும் இராணுவ வீரர்கள் தன்னந்தனியாக வீடு திரும்பும் நிலையில், அரசு ஊழியர்களை போல் வரவேற்பு அளித்து மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து வீட்டிற்கு அழைத்து சென்ற நண்பர்களின் செயல் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்