Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரியர் தேர்வு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஏப்ரல் 07, 2021 04:25

சென்னை: அரியர் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. அதேபோல் கல்லூரியில் இறுதி செமஸ்டரை தவிர்த்து மற்ற செமஸ்டரில் அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது. மேலும், அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு மாணவர்களிடையே வரவேற்பு இருந்தாலும், கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று (ஏப்., 07) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'அரியர் தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக தேர்வாணையம் மற்றும் தமிழக அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்,' என கூறினர். மேலும், தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?, தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர்? என்பதை பல்கலைக்கழகங்கள் வாரியாக தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன், வழக்கை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தலைப்புச்செய்திகள்