Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10 நாட்களில் முட்டை விலை மேலும் 55 காசுகள் உயர்வு

ஏப்ரல் 08, 2021 12:19

நாமக்கல்: வெயிலின் தாக்கத்தால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து வருகிறது. 
நாமக்கல்லில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டைகள் சத்துணவு திட்டத்துக்கு வழங்கப்படுவதுடன் கேரள மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முட்டைகளுக்கு நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு விலை நிர்ணயம் செய்கிறது.
அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு 380 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து நேற்று 420 காசுகளாக இருந்தது. இன்று மேலும் 15 காசுகள் உயர்ந்து 435 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் 55 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலை உயர்வு குறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறியதாவது:-
வெயிலின் தாக்கத்தால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்