Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாஸ்க்குக்கு ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்

ஏப்ரல் 09, 2021 08:42

சென்னை: பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அதை மீறுபவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும்.

கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகமாக பரவி வருவதையடுத்து தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியும் நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

தற்போது கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை அதிகரித்து வருவதால் நோய் தொற்று பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறினால் அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கொரோனா நிபந்தனைகளை கடைபிடிக்காவிட்டால் அவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 செலுத்த வேண்டும். முக கவசத்தை வாய் மற்றும் மூக்கு மூடி இருக்கும் வகையில் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அதை மீறுபவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும்.

சலூன்கள், அழகு நிலையங்கள், “ஜிம்”கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அவர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் விதிமுறைகளை மீறும் தனி நபர்களுக்கு ரூ.500-ம், வாகனம் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்