Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

24 மணி நேரமும் புகார் செய்யலாம் - குடிநீர் வாரியம் அறிவிப்பு

ஏப்ரல் 09, 2021 10:56

சென்னை: கழிவுநீர் அடைப்பு மற்றும் பராமரிப்புப் பணியில் ஈடுபடும் போது எச்சரிக்கையாக கவனத்துடன் செயல்படுமாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கழிவு நீர் அடைப்புகளை சரிசெய்தல், சுத்தம் செய்தல் மற்றும் அதனை சார்ந்த அனைத்து பணிகளும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரத்தில் வசிக்கும் பொதுமக்களின் வீடு மற்றும் பொது இடங்களில் கழிவுநீர் அடைப்பு குறித்த புகார்களை குடிநீர் வழங்கல் வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் அழைப்பு மையத்தை 45674567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும் பாதாள சாக்கடை பாதுகாப்பற்ற முறையிலும், உரிய கவசங்கள் அணியாமல் சுத்தம் செய்தல் மற்றும் மனித நுழைவு வாயிலில் சட்டத்திற்கு புறம்பாக நுழைவது குறித்த புகார்களை 14420 என்ற உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் பணியாளர்கள் கழிவுநீர் குழிக்குள் இறங்காமலும் ஊழியர்கள் முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு உடை மற்றும் காலணிகள் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிகளை பின்பற்றி நவீன எந்திரங்களை முழுமையாக பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கழிவுநீர் அடைப்பு ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர், வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர், தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்களின் உரிமையாளர், தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சுத்தம் செய்யும் பணியாளர்களை தன்னிச்சையாக நேரடியாக ஈடுபடுத்தி கழிவுநீர் குழாயில் வி‌ஷவாயு தாக்கி இறக்க நேரிட்டால் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க பொறுப்பாவார்கள்.

மேலும் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படும். இறந்த பணியாளர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும். எனவே கழிவுநீர் அடைப்பு மற்றும் பராமரிப்புப் பணியில் ஈடுபடும் போது எச்சரிக்கையாக கவனத்துடன் செயல்படுமாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்